வெள்ளி, 20 டிசம்பர், 2019

மறைந்தும் மலரும் சிநேகிதம் - ரவிசுப்பிரமணியன்.

கல்லூரியில் நான் இளங்கலை பொருளாதாரம் படிக்கையில் எனது தமிழ்ப் பேராசியர் மது. ச.விமலானந்தம் மூலமே கரிச்சான் குஞ்சு, எம்.வி.வி, தேனுகா போன்ற பெயர்கள் எனக்கு பரிச்சயமாயின. பெரும்பாலும் அன்றைய தமிழ்ப் பேராசியர்களுக்கும் நவீன இலக்கியத்துக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இன்று வரை அந்த லட்சிய மரபு பலரிடமும் தொடர்வதை சில கல்லூரிகளுக்குப் பேசச் செல்லும்போது நேரில் உணர்கிறேன். ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரைக்கூடச் சில தமிழாசிரியர்கள் தெரிந்துகொள்ளாதது விந்தையாக இருந்தது எனக்கு. அவர்கள் உலகமே வேறாய் இருக்கிறது. பாரதிதாசன் வரை வந்திருக்கிறார்கள். பின்பு தப்பிப்போய் மு.வ., அகிலன் என்று அவர்கள் நவீன தமிழ் இலக்கியத்துக்கு முக்கியமாகக் கருதும் சில நாவலாசியர்களின் பெயர்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் அவ்வளவுதான். இதுபோன்ற சூழ்நிலையில் சில விதிவிலக்குகளும் இருக்கத்தானே செய்யும். அதில் ஒரு விதிவிலக்குதான் மது.ச.விமலானந்தம். அவரும்கூட நவீன இலக்கியத்தின் மீதான அக்கறை பொங்கி வழிந்து அதைத் தெரிந்துகொள்ளவில்லை. ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய வேலையைத் தனி ஒரு மனிதனாகத் தமிழக இலக்கிய வரலாற்றுக் கலைக் களஞ்சியம் என்ற பெயரில் மூவாயிரம் பக்கங்களுக்கான ஒரு புத்தகமாக ஐந்திணை பதிப்பகத்துக்காக அவர் தொகுத்துக்கொண்டிருந்தார். அதன் பொருட்டு அவர் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் அப்போது அவருக்கு இருந்தது. அதிசயமாய் அவர் தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், நகுலன், மெளினி போன்றோர் எழுதியவற்றில் சிலவற்றைப் படித்திருந்தார். இவர்களில் மெளனியைத் தவிர மற்றோரை எல்லாம் அவர் நேரில் போய் பார்த்துப் பேசியுமிருக்கிறார். அப்படி இருந்தும் அவர், இவங்கள்லாம் என்னா எழுதுறாங்கன்னே எனக்கு சரியா புரியல என்றுதான் ஒரு முறை சொன்னார். தி. ஜானகிராமன் எழுத்து மட்டும் அவருக்குப் பிடித்ததாய் இருந்தது. புரிந்தது. அவருக்கு அதில் சிரமம் இல்லை. தவிர தஞ்சாவூர் மொழியும் அந்த மண்ணின் மனிதர்களின் வாழ்வும் அவரை ஈர்த்திருக்கலாம். ஆனா வள வளன்னு எழுதுறார்ல்ல என்று ஒரு முறை கேட்டார். அப்படியா சார் என்று மட்டும் சொல்லிவிட்டு வாயை மூடிக்கொண்டேன். அவரிடம் மறுத்துப் பேசும் தைரியத்தை அவர் முறுக்கிய மீசையும் உரத்த குரலும் அப்போது எனக்குத் தரவில்லை. தவிர எப்போதும் அவர் கண்களில் ஒரு கண்டிப்பு இருந்தபடி இருக்கும். எப்போது சிரிப்பார் எப்போது கடிந்துகொள்வார் என்றெல்லாம் அனுமானிக்க முடியாத ஆளுமை அவர். பிற்காலத்தில் அந்த ஆசிரியர் எனக்கு ஒரு நல்ல நண்பராய், தனது அந்திமக் காலம் வரை என்னோடு பழகினார். சில வருஷங்கள் என் விடுதியிலும் வீட்டிலேயும் தங்கியிருந்தார். அதெல்லாம் ஒரு பாக்கியம்தான். கரிச்சான் குஞ்சு கதைகள் மேல் அவருக்குக் கொஞ்சம் ஆர்வமிருந்தாலும் முதலில் அவர் ‘பசித்த மானிட’த்தைப் படித்துத் தொலைத்துவிட்டார். அதே ரீதியில் அவர் வேறு ஏதும் எழுதிருப்பாரோ என்று பயம் வந்துவிட்டது. அதனால், அவரிடம் எம்.ஏ. பயின்று புராஜக்ட் செய்த பாண்டியன் என்ற மாணவருக்கு அவர் கைடாக இருக்கையில், அவர் படைப்பின் பக்கம் போகவிடாமல் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சுவின் வாழ்வும் பணியும் என்பது போல ஒரு தலைப்பில் ஆய்வு செய்யுமாறு சொல்லிவிட்டார். பசித்த மானிடம் பற்றி அவர்தான் எனக்கு முதன் முதலில் சொன்னார். அது ஆணும் ஆணும் உறவு கொள்வது பத்தின ஒரு நாவல். அதெல்லாம் நீ படிக்காத, சும்மா தகவலுக்காக நான் சொல்கிறேன் என்றார். அதன் பிறகு நம்மால் சும்மா இருக்க முடியுமா. அதைப் படித்துவிட வேண்டுமென்று தேடினால் கும்பகோணத்தில் எங்கும் அந்த நாவல் கிடைக்கவில்லை. தி.க. சுப்ரமணியம் என்ற இன்னொரு தமிழ் பேராசிரியரிடம் ஒரு முறை பேசிக்கொண்டிருந்தபோது கும்பகோணம் எழுத்தாளர்களைப் பற்றிப் பேச்சு வந்தது. அவர் சிகரெட் குடிக்கும் நேரத்தில் மாணவர்களிடம் நண்பர்களைப் போல பழகுவார். அவர் எம்.ஏ. மாணவர்களுக்கு புராஜக்ட் ஒர்க் தருவதற்காக கும்பகோணம் எழுத்தாளர் என்ற வகையில் ‘பசித்த மானிட’த்தை வாங்கிப் படித்துள்ளார். அதைப் பற்றிப் பேசியதும் அந்தக் கருமம் என்கிட்ட இருக்கு உனக்கு வேணுமாடா என்றார். ஆமா சார் என்றேன். அடப்பாவி நல்ல புள்ளைன்னு நினைச்சுட்டனேடா உன்னை என்றார். எல்லா நேரமும் அப்படி இருக்க முடியாதுல்ல சார் என்றதும் ராஸ்கல் என்று சொல்லிச் சிரித்துச் செல்லமாய் கன்னத்தில் தட்டினார்.மறு நாள் ஏதோ சரோஜாதேவி புத்தகத்தைத் தருவதுபோல, ரகசியமாய் பேப்பரில் சுருட்டி அதைக் கொண்டுவந்து கொடுத்தார். அன்று வகுப்புக்குப் போகாமல் கல்லூரியின் உள்ளே உள்ள குளக்கரையின் மர நிழலில் அமர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளோடு வாசிக்கத் தொடங்கினேன். மதியம் ஒரு மணிக்குள் படித்து முடித்துவிட்டேன். எனக்குப் பெருத்த ஏமாற்றம். இவர்கள் சொன்னபடி அதில் எந்த அம்சமும் இல்லை. எல்லாமே ரொம்ப நாசுக்காக இருக்கின்றன. இதற்கா இவ்வளவு அருவருப்பு? இதில் உள்ள வாழ்வு ஏன் இவர்களுக்குப் புரியவில்லை என்று நினைத்துக்கொண்டேன்.காமத்தின் பேசப்படாத ஒரு பக்கத்தை மனத்தடையின்றிக் கரிசனமாக பேசிய நாவல் அது. ஓரினப் புணர்ச்சி பற்றிப் பேசினாலும்கூட அது பாலியல் நாவல் இல்லை. இந்தத் தமிழாசியர்களிடமிருந்து தமிழை, எதிர்காலத் தலைமுறையை எப்படிக் காப்பாற்றுவது என்ற கவலையும் அந்தச் சிறு வயதில் எனக்குத் தோன்றிவிட்டது. அந்த நாவல் தந்த அனுபவம் ரொம்பவும் புதிதாக இருந்தது. பேசாப் பொருளை அவர் பேசிய விதமும் அதை அருவருப்பு தோன்றாமல் கொண்டுசென்ற மொழி நடையும் பிடித்திருந்தன. வித்தை இருந்தால் எந்த ஒரு விஷயத்தையும் இலக்கியப் பனுவலாக மாற்றிவிடலாம் என்பதற்கு அந்த நாவல் ஒரு உதாரணம். அதற்கு முன் தி. ஜானகிராமன் எம்.வி.வி., சுந்தர ராமசாமி போன்ற சிலரின் படைப்புகளில் மிகச் சிலவற்றை நான் வாசித்திருந்தாலும் இது வேறு விதமாக, வித்தியாசமாக இருந்தது. எதையும் குளோரிஃபை பண்ணாத எழுத்தாக எனக்குப்பட்டது. கரிச்சான் குஞ்சு வேத வித்து. ஒன்பது சிறுகதைத் தொகுதிகள், ஒரு நாவல், ஒரு குறுநாவல், இரு கட்டுரைத் தொகுதிகள், ஒரு நாடகத் தொகுதி, இது தவிர ஆறு மொழிபெயர்ப்பு நூல்கள் போன்றவற்றை எழுதியிருப்பதாக விமலானந்தத்தின் குறிப்புகள் கூறின. அவையெல்லாம் அவரைச் சந்திக்கும் ஆவலை மேலும் தூண்டிக்கொண்டே இருந்தன. அந்த நாளுக்காக நான் காத்திருந்தேன். ஒரு மாதத்துள்ளேயே அது சாத்தியமாயிற்று. ** கும்பகோணத்தில் வைகறை வீதி என்றொரு இலக்கிய அமைப்பு எண்பதுகளில் இயங்கிவந்தது. அதில் தென்னிலவன், புவி. உமாசந்திரன் போன்ற இரு நண்பர்கள் துடிப்பாக இயங்கிக் கூட்டங்களை நடத்திவந்தனர். துரதிர்ஷடவசமாக அவர்கள் இருவருமே தற்போது உயிருடன் இல்லை. மாதத்தின் மாலை நேரங்களில் காந்தி பார்க் எதிரே உள்ள சாது சேஷையா நூலகத்தில் அந்த கூட்டங்கள் நடக்கும். வாரம் ஒரு முறை கூட்டம் நடத்த வேண்டுமென்பது எல்லோரது ஆசை. முதல் கூட்டத்திலும் அது முன்மொழியப்பட்டது. அப்படியெல்லாம் நடந்துவிடுமா என்ன. முடிந்த நேரத்தில் கார்டில் தகவல் சொல்லிக்கொள்வோம். கூடுவோம் பேசுவோம். இப்படிப் போய்க்கொண்டிருந்தது. அப்படி ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ளத்தான் கரிச்சான் குஞ்சுவும் எம்.வி.வெங்கட்ராமனும் (எம்.வி.வி.) வந்திருந்தார்கள். கூட்டம் ஆறு மணிக்குத்தான் என்றாலும் அவர்கள் இருவரும் நாலு மணிக்கே கும்பகோணம் வெங்கட்ரமணா ஓட்டலில் வந்து போண்டோ சாப்பிட்டு டிகிரி காப்பி குடித்துவிட்டுத் தாம்பூலம் தரித்தபடி காந்தி பார்க்கின் மர நிழலில் சில இலக்கிய வாசகர்களோடும், தமிழ் இலக்கிய மாணவர்களோடும் பேசிக்கொண்டிருந்தனர். உறுத்தாத மாலை வெய்யில். நல்ல காற்று. பறவைகளின் ஒலி. பெரும் மரங்கள். அவைகளால் படர்ந்த நிழல். சிமிண்ட் தளத்தில் ஆடை விலகியதுகூடத் தெரியாமல் அசந்து தூங்கும் பேர்வழிகள். விளையாடிக்கொண்டிருக்கும் சில குழந்தைகள். இப்படி அந்தச் சூழலலே ரம்மியமாக இருந்தது. அந்த ஜமாவில் இருந்த வெ. சீத்தாராமன் என்ற துணுக்கு எழுத்தாளர் என்னை, என் வியாபாரக் குடும்பப் பின்னண்ணியை, செல்வச் செழுமையை, இலக்கிய வாசிப்பை, சற்று மிகைப்படவே சொல்லி அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இரு ஜாம்பவான்களையும் நான் கையெடுத்துக் கும்பிட்டேன். இருவரும் என்னைப் பார்த்துப் பதிலுக்கு வணக்கம் சொன்னார்கள். அதன் பின் எம்.வி.வி. மட்டும் லேசாக என் பக்கம் திரும்பி ஒரு புன்னகை செய்தார் அவ்வளவே. அப்போது அவருக்குக் கொஞ்சம் சத்தமாக சொன்னால்தான் காது கேட்கும். இருவரும் என்னிடம் எதாவது பேசுவார்கள் என்று பார்த்தால் பேசவேயில்லை. நான் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதாகப் பட்டது. கரிச்சான் குஞ்சு சாம வேதத்தின் எதோ ஒரு ஸ்லோக விளக்கத்தைத் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் சொல்ல, எல்லோரும் அதை உற்சாகமாகக் கேட்டுக்கொண்டு இருந்தனர். சாமவேதத்தில் இசைக்கூறுகள் உண்டு என்றும் அதைச் சற்று இசை பாவத்தோடு உச்சரிக்க வேண்டுமென்றும் சொல்லி, பாடுவதைப் போல ஸ்லோகங்களை நீட்டியும் இழுத்தும் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போதுதான் இசை படிக்க தொடங்கிய எனக்கு அது சுவாரஸ்யமாக இருந்தது. அந்த விளக்கங்களைக் கேட்கக் கேட்க அட இவ்ளோ இருக்கா இதுல, இதெல்லாம் தெரிஞ்சுகாம இந்த பகுத்தறிவுக்காரன்களோடு சேர்ந்து உருப்புடாம போயிட்டு இருக்கமே என்று ஒரு கணம் தோன்றிற்று. அவரேதான் பேசிக் கொண்டிருந்தார். எம்.வி.வி. வெற்றிலையைத் துப்பிவிட்டு வந்து மறுபடி வெற்றிலை போடுவதில் சிரத்தையாய் இருந்தார். எனக்கு என்னிடம் இருவரும் எதும் பேசிவிட மாட்டார்களா என்று தோன்றிக்கொண்டே இருந்தது. இருவரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.அவங்களை எல்லாம் ரொம்ப போர் அடிக்காதிங்க. நாம பழம் பஞ்சாங்கம். பிரஸண்டா எதாவது சொல்லுங்க என்றார் எம்.வி.வி. அவா கேட்டததான நான் சொல்லிண்ட்ருக்கேன் என்று சொல்லிவிட்டுச் சட்டென எதோ மூட் ஆனவர்போல வேக வேகமாகச் சொல்லி முடித்து எம்.வி.வி.யின் வெற்றிலைப் பெட்டியைத் தன் பக்கம் இழுத்து வெற்றிலை போட்டபடி, நீங்க எதாவது காண்டம்ப்ரரியா எதாவது சொல்லுங்கோ என்று எம்.வி.வி.யைப் பார்த்துச் சொன்னர். கேட்டா சொல்றேன் என்று சொல்லிவிட்டு உட்கார்ந்திருந்தவர்களைக் கேள்விபோலப் பார்த்தார் எம்.வி.வி. உங்க நித்ய கன்னி அபூர்வமான நாவல்ன்னு சொல்றாங்க. அத பத்தி கொஞ்சம் சொல்லுங்க என்று கேட்டார் நாற்பத்திஐந்து வயசு மதிக்கத்தக்க ஒருவர் கேட்டார். நீங்க என்ன பண்ணிட்டு இருக்கிங்க என்றார் எம்.வி.வி. அவர் எதோ ஒரு அரசு வேலையில் இருப்பதாகச் சொன்னார். என்ன வேலை என்பது இப்போது நினைவு இல்லை. ஆனால் நிச்சயமாய் அவர் தமிழ் ஆசிரியர் இல்லை என்பது மட்டும் ஊர்ஜிதம். நீங்க அந்த நாவலைப் படிச்சிருக்கிங்களா என்றார். இல்லை என்று பதில் வந்தது. அப்பறம் எப்படி வெறும் பேரை மட்டும் தெரிஞ்சுகிட்டு கேள்வி கேக்குறிங்க. கேள்வி கேக்கறதுக்கு முன்ன எதாவது படிங்க சார் ப்ளீஸ் என்றார். சில வினாடி மெளனத்துக்குப் பின் எதிர்பாராமல் நீங்க எதும் படிச்சிருக்கிங்களா என்று என்னைப் பார்த்துக் கேட்டார். திடீரெனக் கேட்டதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. சுதாரித்துக்கொண்டு, உங்க சிறுகதைகள் சிலது படிச்சிருக்கேன் சார் என்றேன். எப்படிக் கிடைச்சுது? மது. ச.விமலானந்தம் மூலமாக. ஓ. சரி, படிச்ச எதாவது ரெண்டு மூணு கதை பேர் சொல்லுங்களேன். தெரியாத கேள்வி வந்த வினாத்தாளைப் படித்ததுபோல எனக்கு எதுவும் ஓடவில்லை. ஞாபகம் கைகொடுத்தது. மெல்லத் தட்டுத் தடுமாறி, சிட்டுக்குருவி, பைத்தியக்காரப்பிள்ளை, வரவும் செலவும் என்றேன் நீங்க பாஸ் என்றார். சாரோட பசித்த மானிடம் இந்த மாசம்தான் படிச்சேன் ரொம்ப பிடிச்சிருந்துது என்றேன். கரிச்சான் குஞ்சுவைத் தட்டி, கேட்டிங்களா என்றார். ம் என்றார் அவர். வியாபாரி, மைனர் செயினும் மோதரங்களும் போட்டுண்டுண்டு இருக்கேள். படிக்க வேற செய்றேள் ஆச்சர்யம். பேஷ் பேஷ் வாழ்க… நன்னா இருங்கோ என்றார். அதுதான் அவர் என்னோட பேசிய முதல் பேச்சு. அது கிண்டலா, விமர்சனமா, கும்பகோணம் குசும்பா எதுவும் அப்போது எனக்குத் தெரியவில்லை. அவர் என்னோடு பேசியதே மகிழ்ச்சியாய் இருந்தது. அதற்குள் கூட்டத்துக்கு வருமாறு யாரோ வந்து கூப்பிட, இருவரும் எழுந்து போனார்கள். நானும் உடன் சென்றேன். அதன் பின் இரண்டு மூன்று முறை கரிச்சான் குஞ்சு அந்தக் கூட்டங்களுக்கு வந்த நாளிலும் இந்தியன் ஓவர்ஸீஸ் பேங்கில் வேலை செய்துவந்த அவர் மகள் விஜயாளைப் பார்க்க அவர் வரும் சந்தர்ப்பங்களிலும் அவரைச் சந்தித்துப் பேசியதில் ஒரு சின்ன நெருக்கம் ஏற்பட்டது. வீட்டுக்கு வந்து உங்களைப் பாக்கலாமா சார் என்று கேட்டேன். பேஷா வாங்கோ. எந்த நேரமும் வரலாம் சார். நான் வெட்டி ஆபீஸர். எப்ப வேணா வரலாம், ராத்திரிலகூட என்று சொல்லிக் காரைக்கால் ரோடு பாரதி நகர் முகவரியைச் சொன்னார். ஏதாவது இலக்கியக் கேள்விகளோட வாங்கோ. சம்பாஷணைக்கு எதும் வேணுமே அதுக்காக சொல்றேன் என்றார். பாரதிய எதும் வாசிச்சிருக்கேளா என்றார். ஆமாம் சார் என்றேன். அப்ப அதுகூடப் போறும் என்றார். ** அரைக் கவுளி வெத்தலை, ஏ.ஆர்.ஆர். சீவல், மைதீன் புகையிலை, சுண்ணாம்பு, ரெண்டு கிளாஸ்கோ பிஸ்கட் பாக்கெட் இவற்றோடுதான் பெரும்பாலும் அவரைப் பார்க்கப் போவேன். மணிக்கணக்காகப் பேசுவோம். எல்லாம் இலக்கிய விசாரங்கள். சில சமயம் அரசியல், சொந்த ஊர்ப் பெருமை இப்படியாகப் போகும். உரையாடல் என்று சொல்ல முடியாது. ஒரு டெமான்ஸ்ட்ரேஷன்போல இருக்கும். பேச்சினூடே கவிதைகளை, ஸ்லோகங்களையெல்லாம் சொல்லுகையில் அததற்கான உணர்ச்சி பாவங்களோடு சொல்வார். கெட்ட வார்த்தைகள் சகஜமாக இருக்கும். இடையிடையே அவர் வெற்றிலை போட்டுக்கொள்வது அலாதி அழகு. ஒருவரைப் பிடித்துவிட்டால் வயசு வித்தியாசமே தெரியாதபடி ஈஷிக்கொண்டுவிடுவார். நகைச்சுவை உணர்வு, குழந்தைபோலச் சிரிப்பு, கைதட்டிப் பேசுவது, கொஞ்சமும் ஈகோ இல்லாமல் இயல்பாக இருப்பது இப்படி அவர் குணங்களைச் சொல்லலாம். எதையும் உடைத்துப் பேசுவார். நம்மையும் அப்படிப் பேச வைத்துவிடுவார். ஒளிவு மறைவு, நாசூக்கு எதும் தெரியாது. பட்டதைப் பட்டவர்த்தனமாக நடுக்கூடத்தில் போட்டு உடைப்பது அவர் சுபாவம். கோபம் வந்தால் சண்ட மாருதம்தான். கோபத்தைப் போலவே பிடிவாதமும். எவ்வளவு பிடிவாதம் என்றால் கண் ஆபரேஷன் ஆகியுள்ளது. வாய் அசைக்கக் கூடாது என்கிறார் டாக்டர். அந்த நேரத்தில் வெற்றிலை போட்டே தீருவேன் என்று அடம் பிடித்துப் பொட்டுக்கொள்கிறார். அவர் மகள் விஜயாள் வேண்டாம்ப்பா சொன்னா கேளு என்று தடுக்கிறார். தகப்பன் சாமி ஆகாதேடி போடி அன்னாண்ட என்று சொல்லிவிட்டுப் போட்டுக்கொள்கிறார். அவ்வளவு பிடிவாதம். நினைத்ததைச் செய்ய வேண்டும் என்று நினைப்பார். எம்.வி.வி.க்கு நேர் எதிர் குணங்கள் இவை. அவர் நாசூக்கு, கூச்சம், அமைதி இப்படி இருப்பார். கரிச்சான் குஞ்சு கோபம் வந்தாலும் வித்தியாசமாக ஏதாவது செய்வார். பள்ளியில் பாடம் எடுக்கும்போது பல துறை சார்ந்து செய்திகளைச் சொல்லி உணர்ச்சிப்பூர்வமாக நடத்துவதால் மாணவர்கள் அவர் வகுப்புக்காகக் காத்திருப்பார்களாம். அப்படி இருந்த மாணவர்கள் ஒருநாள் ஏதோ பேசிகொண்டிருக்க கோபம் கொண்ட கரிச்சான் குஞ்சு நாற்காலியைத் திருப்பி போட்டு உட்கார்ந்து போர்டைப் பார்த்தபடியே வகுப்பை நடத்தினார் என்று அவருடன் மன்னார்குடியில் தமிழாசிரியராக வேலை பார்த்த சந்தகவி ராமசாமி ஐயங்கார் என்னிடம் ஒருமுறை சொன்னார். நல்ல ருசியான சாப்பாட்டில் ஆசை இருந்தது கரிச்சான் குஞ்சுக்கு. கொஞ்சமாக இருந்தாலும் ருசியா இருக்கணும் என்பார். தமிழ் தவிர, சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் எழுதவும் பேசவும் தெரிந்திருந்தது அவருக்கு. இந்த மொழிகளில் உள்ள இலக்கிய விஷயங்கள் எல்லாம் சொல்வார். பாரதியின் சக்திக் கூத்து, நிற்பதுவே நடப்பதுவே போன்ற கவிதைகளுக்கெல்லாம் அவர் விளக்கம் சொல்லிக் கேட்க வேண்டும். அப்படி ஒரு அலாதி அனுபவம் அது. ஒருநாள் சக்திக் கூத்தில் வரும் “மந்திரம் போல் வேண்டுமடா சொல் இன்பம்” என்ற வரிக்கு மட்டும் அரை மணிநேரத்துக்கு மேல் பொருள் சொன்னார். மந்திரம் என்றால் என்ன. அது எப்படி சொல்லாகும். அப்படி ஆன சொற்கள் என்னென்ன. சமஸ்கிருதத்தில் அது எப்படியெல்லாம் வந்துள்ளது என்று பல கோணங்களில் பேசிக்கொண்டே சென்றார். ** பசித்த மானுடம் எப்படி சார் எழுதினிங்க? அதெல்லாம் உண்மை. பாத்தது, கேட்டது. நீங்க படிச்சிருக்கேளா? சார், முதல் சந்திப்புலயே படிச்சேன்னு சொன்னனே சார். அச்சா அச்சா. வயசாறதோன்னோ. எப்படி ஃபீல் பண்ணேள்? இப்படி ஒரு நாவலை நான் என் லைப்ல படிச்சதில்ல சார். லைஃப்லேயேவா. ஆமா. இப்ப என்ன வயசாறது உனக்கு? இருபத்தி ஐஞ்சு. ரைட் ரைட். பேச்சில் அப்படி ஒரு கிண்டல் ததும்பும். ஆனால், யாரையும் நோகச் செய்யும் நோக்கம் இருக்காது. அந்த நாவல் பத்தி யாருக்கும் தெரியலயே சார் என்று சொல்லி எங்கள் ஆசிரியர்கள் சொன்ன கதைகளை எல்லாம் சொன்னேன். அவாள்ளாம் அப்படி இல்லன்னாதான் ஆச்சர்யம். அவா கூட்டத்துலேர்ந்து வந்தவன்தானே நானும். சக எழுத்தாளர்களே பேசலயே, அதான் நேக்கு வருத்தம். வாயையும் இதையும் அழுத்தி மூடிண்டு இருக்கான்களேய்யா. அதெல்லாம்விட மேல எல்லாம் பண்ணிண்டுருப்பான்கள். அபிப்ராயத்துல ஆஷாடபூதி. அவ்ளோதான். இதெல்லாம் புரிய, பேச இன்னும் அம்பது வருஷமாகும்ன்னு நினைக்கிறேன் நான் எம்.வி.வி. எல்லாம் காலத்துக்கு முன்ன பொறந்துட்டோம். அப்படில்லாம் இல்ல சார். நானும் தேனுகாவும் முந்தா நாள் பிரகாஷ் நடத்துன கூட்டத்துக்கு தஞ்சாவூர் பொயிருந்தோம். க.நா.சு. பேசி முடிச்சதும் உங்களையும் எம்.வி.வி.யையும் பத்தி எங்ககிட்ட விசாரிச்சு கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தார். அப்போ உங்க பாரதி தேடியதும் கண்டதும் பத்தி சொன்னார். பாரதி நூற்றாண்டுக்காக எழுதப்பட்ட 67 புஸ்தகங்களுக்கு மேல வாசிச்சிட்டேன். நான் படிச்சதுல பெரும்பாலும் தென்பட்டது கேம்பஸ் இடியஸி. அதுக்கு மத்தில கனகலிங்கம் எழுதிய என் குருநாதர், கரிச்சான் குஞ்சுவின் பாரதி தேடியதும் கண்டதும், யதுகிரியின் பாரதி சில நினைவுகள் இந்த மூணே மூணுதான் இதுவரை தேறிருக்கு என்றார். கரிச்சான் குஞ்சு புக்க எதை வச்சி அப்படி அஸஸ் பண்ணினீங்கன்னு தேனுகா கேட்டார். பாரதிய பத்தி எல்லாரும் எழுதிடலாம். அவன் ஆன்மிகப் பக்கத்தப் புரிஞ்சி எழுத வேற ஒரு ஞானம் வேணும். அவர் வேதமெல்லாம் படிச்சவர் இல்லியா நமக்கு இதுவரை தெரியாத பொருளை எல்லாம் காட்டுறார். அது அவராலதான் முடியும். அதுனால அது யூனிக். அதுனாலயே அது முக்கியம். அப்பறம் அவர் பிரசண்டேஷன் மொழி அப்படின்னார் என்று சொன்னேன். இதைக் கேட்ட கரிச்சான் குஞ்சு சலனமில்லாமல் இருந்தார். என்ன சார் ஒண்ணும் சொல்ல மாட்டங்கறீங்க என்றேன். அவர் ஏற்கனவே லெட்டர்ல எனக்கு எழுதிட்டார். இதவிட கூடவே எழுதிட்டார். உங்ககிட்ட என்ன சொன்னார்ன்னு கேக்கத்தான் கேட்டுண்ட்ருந்தேன். அந்த புஸ்தகத்துக்கு இது போறாதா, வேற என்ன வேணும்? சரி. அந்தப் பொன்னாடைய அப்படியே கழட்டி வச்சிருவோம். வேற எதாவது கேளுங்கோ. இடைல இடைல வேலைய விட்டுட்டு இருக்கப்ப குடும்பத்த எப்படி சார் சமாளிச்சிங்க? என்னன்னவோ செஞ்சேன். அதெல்லாம் எதுக்கு இப்ப இலக்கியத்த பத்தி பேசுங்கோ. எழுத்தாளர்கள் பத்தி எதும் வம்பு தும்பு இருந்தாலும் பேசலாம். அதெல்லாமும் ஒரு சுகம்தான் இல்லியா. என்ன இங்க ஆத்துல செக்ஸ் பத்தி பேச முடியாது ஹா ஹா என்று சிரிப்பார். ** எவ்வளவு கஷ்ட்டத்திலும் எங்களைப் போன்ற நண்பர்களிடம் அவர் கடன் கேட்டதில்லை. ஒரு முறை எங்கோ ஒரு நெருங்கிய உறவினர் வீட்டு விசேஷத்துக்குப் போக முடியாதததைப் பற்றி என்னிடம் சொன்னார். பணம்தான் காரணமாக இருக்கும் என நானாக யூகித்துக்கொண்டேன். அவர் மகள் விஜயாள் பேங்க் வேலைக்குப் போன பிறகு வீட்டுக் கஷ்டம் கொஞ்சம் குறைந்திருந்தது. ஆனாலும் ஒருவர் சம்பாத்தியம் எப்படி மொத்த குடும்பத்துக்கும் போதுமென நானாக நினைத்துக்கொண்டு, சார் நான் ஒரு பத்தாயிரம் தரலாம், எனக்கு எந்த சிரமமும் இல்ல, தரவா என்றேன். வேண்டாம் வேண்டாம், வச்சிக்கங்கோ வச்சிக்கங்கோ என்று சொல்லிவிட்டார். ஊருக்குப் போகததற்குப் பணம் காரணம் இல்லையென்று அப்புறம் தெரிந்தது. வீட்டில் அடிக்கடி சாராதா அம்மாவோடு அவர் போடும் சண்டையும் காரணமாக இருந்திருக்கலாம். சில சமயம் அவர்கள் கையில் கரண்டியோடு வெளியே வந்து கத்துவார்கள். ஆனால், அடிப்படையில் நல்ல மனுஷி. பெண்களை வளர்க்க அவர் பட்ட பாடுதான் அவரை அப்படியெல்லாம் பேச வைத்தது. மன்னார்குடி நேஷனல் உயர்நிலைப் பள்ளியில் அறுபது ரூபாய் சம்பளத்துக்கு அவர் தமிழாசிரியராக வேலை செய்த காலத்தில் குடும்பம் கடும் கஷ்டத்தில் இருந்துள்ளது. சில நாட்கள் வேலைக்கே போகாமல் சீட்டாடித் தோற்பதும் ஜெயிப்பதுமாக இருந்துள்ளார். அந்தப் பள்ளியின் தாளாளர் சாமிநாத உடையார் இவரைக் கூப்பிட்டு, உம்மகிட்ட படிக்கிற பசங்க எப்படிங்காணும் உருப்படுவான் என்றெல்லாம் அடிக்கடி கடிந்துகொள்ளும் நிலையில் இருந்துள்ளார். டிகேஎஸ், இதை வச்சிதான் எங்கிட்ட படிக்கிற பையன்ல்லாம் உருப்பட போறானா. அதெல்லாம் கர்மா. விதி. அது விளையாடிண்ருக்கப்ப நான் சீட்டுதான் விளையாடணும். ஏன், திருடக்கூட செஞ்சிருக்கலாம். வேதம் படிச்சிட்டா இதுக்கெல்லாம் எக்ஸப்ஷனா என்ன. இதெல்லாம் நான் மனசுல கேட்டுண்டேன். அவன்கிட்ட நேர கேட்டா சாப்டுண்டுருக்க பூவாவும் போயிடுமே என்று என் தாய் மாமா டி.கே. சுந்தர மூர்த்தியிடம் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். என் மாமாவின் ஊர் மன்னார்குடி. ராஜகோபால சுவாமி கோவில் அருகே விறகுக் கடை வைத்திருந்தார். அங்கு சில சமயம் வந்து பேசியிருக்கிறார் கரிஞ்சான் குஞ்சு. இருவரும் நெருங்கிய நண்பர்கள் இல்லை என்றாலும் நண்பர்கள். மாமாவுக்கு இலக்கிய வாசனையே கிடையாது. ஆனாலும் சாமி சாமி என்று அவரை அன்பாக அழைத்து அவரோடு மிகுந்த மரியாதையோடு பழகியுள்ளார். இதெல்லாம் மாமாவின் கடைக்கு வரும்போது அவர் பகிர்ந்துகொண்டது. ** கர்மா, விதி இதிலெல்லாம் நம்பிக்கையில்லை என்று சொல்லிக்கொண்டாலும் கரிச்சான் குஞ்சு அதையெல்லாம் நம்பத்தான் செய்தார். அவர் அப்பா அம்மாவுக்கு அவ்வளவு சிரத்தையாய் தவசம் தருவார். மந்திரம் சொல்லும் வாத்தியார்கள் எதும் தப்பாகச் சொன்னால் பிடி பிடி என்று பிடித்துவிடுவார். சரஸ்வதி பூஜை, விநாயகர் சதுர்த்தி எல்லாம் விசேஷமாகக் கொண்டாடுவார். ராம் ராம் என்று ஜபம் பண்ணுவார். புரட்சிகரமாகச் சிந்தித்தாலும் எழுதினாலும் சடங்கு சம்பிரதாயங்களை அவரால் விட்டுவிட முடியவில்லை என்றுதான் எனக்கு தோன்றியது. பொதுவாய் வீட்டைப் பற்றிக் கவலையின்றி விட்டேத்தியாகத்தான் இருப்பார். அது பற்றி எதாவது கேட்டாலும் பல சமயங்களில் பேச்சை மாற்றிவிடுவார். நேக்கு பால்யத்துலேர்ந்து தொடர்றது கஷ்டம். அவன்தான் நம்ம ஆத்ம சிநேகிதன் இல்லியா. இந்த இன்பம் இருக்கே அது திருட்டுப் பண்டாரம். சட்டுன்னு ஓடிடறது பாத்தேளா என்று சொல்லிவிட்டு, அதற்கும் கை தட்டிச் சிரிப்பார். லெளகீகக் கஷ்டம்தான் கலைஞனைப் பாடா படுத்திக் கொல்லும். பாரதியையே படுத்தலையா சொல்லுங்கோ. வேற கஷ்டத்த எல்லாம் கலைஞன் ஈஸியா கடந்துடுவான். இல்லன்னா அத எப்படி நிர்வகிக்கறதுங்கிறதாவது அவனுக்கு தெரியும். ஆனா, வீட்ல உள்ள வல்லார ஓழி முண்டைங்க வாயில பூந்து புறப்பட்டு அவன் வர வேண்டியிருக்கறது எவ்ளோ கஷ்டம் பாருங்க. அவள்க வாய மூட எதாவது ஒரு அறம் பாடலாம்ன்னு இருக்கேன். ஆனா அத இந்திலதான் பாடணும்… இப்படி எல்லாம் சொல்லிச் சிரிப்பார். வக்காள ஓழி, தாயோழி, தேவடியா, அவுசாரி முண்டை அப்படின்னுல்லாம் அடிக்கடி சொல்றீங்க. இந்தக் கெட்ட வார்த்தை எல்லாம் எங்க சார் கத்துகிட்டிங்க? சொன்னா நம்புவேளா? சொல்லுங்க சார். எல்லாம் வேத பாடசாலைலதான். என்ன சார் இப்படி சொல்றிங்க? ஆச்சர்யமா இருக்கே, நம்ப முடியலையே சார்... ஆமா உண்மைதான். நீங்க எதெல்லாம் புனிதம்ன்னு நினைக்கிறேளோ அங்கெல்லாம் ஒரு கைப்பு இருக்குமே. நீங்க நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம். ஆனா, உண்மை அதான். ** வீட்டுக் கவலையே எதுவுமில்லாமல் வீட்டில் சாதா ஹிண்டு பேப்பரும் புத்தகங்களும் படித்தபடி யாரோடாவது எதையாவது பேசிக்கொண்டே இருந்ததனால் அவர் மனைவி சாரதாம்மா அவர்கள் வழக்கம்போலச் சற்றுக் கோபமாகப் பேசிவிட்டார். இவரும் அவர்களைக் கடுமையாக ஏதோ திட்டி, போடி உள்ள என்று விரட்டினார். இந்தச் சண்டையைப் பார்த்தது எனக்குச் சற்றுக் கஷ்ட்டமாகிவிட்டது. நான் வரன் சார் என்று கிளம்பினேன். செத்த இரு, போலாம் என்று சொல்லிவிட்டு மறுபடி பேசினார். பேச்சில் பழைய சுரத்து இல்லை. அது நடந்தது தொண்ணூறாவது வருஷம் ஜூலை ஏழு எட்டு அல்லது ஒன்பது ஆகிய மூன்று நான்கு நாட்களுக்குள் இருக்கலாம். அதன் பிறகு அதே மாதம் ஜூலை 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வந்த அவர் பிறந்த நாளில் வழக்கம்போல வெற்றிலை சீவல் பிஸ்கட்டோடு சென்று பார்த்த பின் சட்டை பாக்கெட்டில் எழுதி வைத்திருந்த ஒரு கவிதையை உங்க பிறந்த நாளுக்காக என்று எடுத்துக்கொடுத்தேன். அவர் இன்று எனக்கு பிறந்தநாள் என்றெல்லாம் சொல்லவில்லை. சொல்ல மாட்டார். அப்படி அவர் கொண்டாடியதாகவும் எனக்கு நினைவில்லை. கவிதையைப் படித்ததும் அவர் சற்றுக் கலங்கிவிட்டார். கண்ணாடியைக் கழட்டிவிட்டு தோள் துண்டால் கண்ணைத் துடைத்துக்கொண்டார். எதும் பேசவில்லை. என் கையைப் பிடித்தபடி சற்று நேரம் வீட்டுப் பக்கம் இருந்த மரத்தின் அசைவையே வெறித்துப் பார்த்தார். சற்று நேரம் கழித்து எப்படி தோணித்து இத எடுத்து இன்னிக்கு எனக்கு படிக்க குடுக்கணும்ன்னு, நீ நன்னா இருப்ப. தேங்க்ஸ் என்றார். நாங்கள் இருவருமே நார்மலுக்கு வர ஒரு பத்து நிமிஷம் ஆனது. அதன் பிறகு ஒரு மணிநேரம் பேசினோம். அந்த பாரதியார் கவிதை இதுதான். நிதி அறியோம் இவ்வுலகத்து ஒருகோடி இன்பவகை நிமித்தம் துய்க்கும் கதி அறியோம் என்றுமனம் வருந்தற்க குடந்தைநகர்க் கலைஞர் கோவே! பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில் துதி அறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்கு வாயே இது உ.வே. சாமிநாதய்யருக்கு பாரதி எழுதிய வாழ்த்துக் கவிதையின் கடைசிப் பகுதி. பாரதியில் தோய்ந்த அவரை இந்தக் கவிதை வரிகள் கலங்கடித்துவிட்டன. ** பிரபஞ்சன், பாலகுமாரன், மாலன் போன்ற அக்காலத்து இளம் எழுத்தாளர்கள் எல்லாம் அவர் வீட்டுக்குச் சென்று அவரைப் பார்த்திருக்கிறார்கள். யார் எழுத்து உங்களுக்கு பிடிச்சிருக்கு சார் என்று ஒருமுறை கேட்டேன். எல்லாரும் எதையோ ஒண்ண நன்னா பண்ணிடறான்க. திறமை உள்ளவாதான். ஆனா நாடார்தான் (பிரபஞ்சன்) பரிமளிப்பன். அதான் என்னோட அஸம்ஷன். அவன் முழுசா எழுத்தாளரா மட்டுமே இருக்க அந்த லக்ஷணமே அத நேக்கு சொல்றது. கரிச்சான் குஞ்சு 1992இல் மறைந்த பிறகு பதினைந்து வருஷம் கழித்து 2007இல் ஜெயகாந்தனுடன் பேசிக்கொண்டிருந்தபோது பிரமாணர்களாக இருந்தாலும் முற்போக்குக் கொள்கைகள் கொண்டவர்கள் கரிச்சான் குஞ்சு திருலோகம் போன்ற பிரகிருதிகள். அதனால்தான் அவர்கள் நம்மை ஈர்க்கிறார்கள். கரிச்சான் குஞ்சு நான்கு வேதங்களும் கசடறக் கற்றவர். அவர்கள் பிறப்பால் மட்டுமே பிராமணர்கள், பாரதி மாதிரி. மற்றபடி அவர்கள் நூறு பர்சண்ட் தமிழர்கள். நான் உக்கார்ற இந்த சீட்ல எவனும் உக்காரக் கூடாதுன்னு சொல்லிருக்கேன். என் வாய்க்கும் கோவத்துக்கும் பயந்து யாரும் உக்காந்ததுமில்ல. ஆனா அவங்க ரெண்டு பேரும் என்னைப் பாக்க வந்தா நான் அவங்களை என் சீட்ல உக்காரவச்சிட்டு எதிர்ல உக்காந்திருப்பேன். அவங்கள்ளாம் என்னை பாக்க வரதே எனக்கு ஒரு மரியாதை இல்லியா. அந்த மாஸ்டர்ஸுக்கு நாம தர்ற ஒரு சின்ன பதில் மரியாதை அது. ஆனா அதுகள் அதையெல்லாம் கடந்த ஆத்மாக்கள் தெரியுமோ என்றார் ஜெயகாந்தன். ** எனக்கு கரிச்சான் குஞ்சுவின் ஆசீர்வாதம் பூரணமாக அமைந்தது. என் முதல் தொகுப்புக்குத் தமிழக அரசு பரிசு கிடைத்தபோது ஆசி வாங்க முதலில் எம்.வி.வி. வீட்டுக்குப் போனேன். அவரிடம் சொல்லிக் காலில் விழுந்தேன். ரொம்ப சங்கோஜப்பட்டு விலகிவிட்டார். நாம பிரண்ட்ஸ் தான ரவி. இதெல்லாம் எதுக்கு நல்லா இருங்க என்று விலகி நான் எழுந்ததும் சில வினாடி தோளில் அணைத்துக்கொண்டார். தலையில் சில நொடி கைவைத்தார். கரிச்சான் குஞ்சு, எம்.வி.வி. இருவருமே எனக்கு 45 வயசுக்கு மேல் மூத்தவர்கள். அடுத்து கரிச்சான் குஞ்சு வீட்டுக்கு வந்தேன். ஈஸி சேரில் உட்கார்ந்திருந்தார். வெற்றிலை, சீவல், புகையிலையோடு சாக்லெட் பாக்கெட்டும் வாங்கிக்கொண்டு பொயிருந்தேன். எதுக்கு சாப்டக் கூடாததா பாத்து வாங்கிண்டு வர என்று கேட்டார். நீங்கதான் எதும் வேணாம்கறீங்க. நல்ல சேதி சொல்றப்ப ஸ்வீட்டோட சொல்லணும் இல்லியா. சரி இரு என்று எழுந்து அடுப்பங்கரை சென்று ஒரு ஸ்பூனில் சர்க்கரை கொஞ்சம் எடுத்து வந்து வாயில் போட்டார். அவர் ஈஸி சேரில் அமர்ந்ததும் காலைத் தொட்டு ஆசீர்வதியுங்கள் என்றேன். அய்யோ அசடே, சாஷ்டாங்கமா விழ வேண்டாமா. உள்ள வா என்றார். அவர் ஸ்வாமி படத்துக்கு முன் சென்று விபூதி எடுத்துகொண்டார். கிழக்குப் பார்த்து நின்றுகொண்டார். இப்போ விழு. சொல்றவரை எழுந்துக்காத என்றார். நான் காலில் விழுந்திருந்தேன். அவர் எதோ ஒரு மந்திரம் சொல்லிக்கொண்டே போகிறார். கிட்டத்தட்ட முப்பது வினாடிகளுக்கு மேல் போகிறது மந்திரம். நான் கீழே படுத்தே இருக்கிறேன். இப்போ எழுந்துக்கோ என்றார். எனக்கு விபூதி பூசித் தானும் பூசிக்கொண்டார். என்னமோ பாலகுமாரனைப் பத்திப் பெரிசா சொல்லிண்ட்ருக்கியே அவன் கமர்ஷியலா போயிட்டான். நீ இலக்கியத்துல அவனவிட பெரியாளா நன்னா வருவ. ஈஸ்வரோ ரக்ஷிது. வாழ்க வாழ்க என்றார். இத்தனைக்கும் அப்போது நான் ஒரே ஒரு சுமாரான கவிதைப் புத்தகம்தான் எழுதியிருந்தேன். ஆனால், அதையே அவர் கனிந்த மனசு கொண்டாடியது. 1992 ஜனவரி 12ஆம் தேதி மார்கழி மாசம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் அன்றுதான் இது நடந்தது. நான் அவரைக் கடைசியாகப் பார்த்ததும் பேசியதும் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதமும் அதுதான். தன் வாழ்வில் அவர் கடைசியாகப் பேசிய பேச்சும் அதுதான். அதன் பின் கழிவறை சென்றவர் அங்கே விழுந்து நினைவு தப்பி மறைந்தார். அதன் பின் எந்தப் பேச்சும் இல்லை. அவரின் கடைசி சம்பாஷணை என்னோடே முடிந்துபோனது அப்போது எனக்கு தெரியாது. நான் சென்னை கிளம்பி வந்துவிட்டேன். அவர் இறுதிச் சடங்கில் இருக்க முடியாத துர்ப்பாக்கியம். அவர் இல்லை ஆனால் அவர் சொன்ன சொல் இன்றும் என் மனதில் நின்று நிலைக்கிறது. ** (3.9.2019 அன்று கும்பகோணத்தில் சாகித்ய அகாடமியும் சிவகுருநாதன் செந்தமிழ் நூல்நிலையமும் இணைந்து நடத்திய கரிச்சான் குஞ்சு நூற்றாண்டு விழா கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை.) அக்டோபர் 2019 - வால்யூம் 31 – இஷ்யூ – 10 இதழ் – 238 எண்ணுள்ள காலச்சுவடு இதழில் பக்கம் 84 முதல் 86 வரை பிரசுரமாகியுள்ளது.